சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "குடலிறக்க நோய் என்பது பெரியளவில் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 60 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
கடந்த காலங்களில் குடலிறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யும்போது வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை செய்யும்போது அதனுடைய தழும்பு மண்ணுக்கு செல்லும்வரை இருக்கும். ஆனால் தற்போது நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5 லட்சம் அளவுக்கு கோவாக்சின் தடுப்பூசி உள்ளது. அதை அரசு பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கின்றனர். தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அதிகளவில் வந்துகொண்டுள்ளன.
ஆனால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அப்போலோ மருத்துவமனையில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகளை இரண்டாவது தவணை கோவாக்சின் தேவைப்படுபவர்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இரண்டிலும் சேர்த்து 2,74,97,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதற்காக 12 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது. விரைவில் 3 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலையை எட்டுவோம்.
60 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி
அரியலூரில் மொத்தம் 6,981 கர்ப்பிணிப் பெண்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் மொத்தம் 11,625 மாற்றுத் திறனாளிகள் உள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. கொடைக்கானல் நகராட்சியில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சிஎஸ்ஆர் முறையில் தடுப்பூசி வழங்க முடிவு
சென்னையில் நேற்று ஒன்றிய அமைச்சருடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஒன்றிய அரசு தடுப்பூசிகளை மாநில அரசிற்கு இலவசமாக 90 விழுக்காடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளுக்கு 10 விழுக்காடு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
அப்போலோவில் இருக்கும் 5 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளை சி.எஸ்.ஆர் முறை மூலம் இலவசமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த நிர்வாகம் முன்வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!