தமிழ்நாட்டில் சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டன. 160 மையங்களில் கோவிஷீல்டு, 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதையடுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொதுசுகாதாரத்துறை கோவிஷீல்டு தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டது. அதன்படி 28 ஆம் தேதி முதல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 1ஆம் தேதி 339 மையங்களில் ஒரு நாளைக்கு 33,400 நபர்களுக்கு போடுவதற்கு திட்டமிட்டது. அதேபோல் கோவாக்சின் தடுப்பூசி 6 மையங்களில் 600 நபர்களுக்கு போடுவதற்கு திட்டமிட்டது. ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதி 6,866 நபர்கள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 409 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசி 10 லட்சத்து 45 ஆயிரமும், கோவாக்சின் தடுப்பூசி 1 லட்சத்து 89 ஆயிரம் வந்துள்ளன.
முதல்கட்டமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 5 லட்சத்து 19 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் ‘கோவின்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் விவரங்கள் ‘கோவின்’ செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றிலும், ஒன்றியம், நகர பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "சுகாதாரத் துறை பணியாளர்கள், தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்களை கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் கோவின் செயலியில் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். தடுப்பூசியை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், உதவியாளர்களின் விவரங்களை, மருத்துவமனைகள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகள் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். 150 பணியாளர்களுக்கு மேல் பணியாற்றும் மருத்துவமனைகளில் போடுவதற்கு அனுமதி அளிக்கலாம்.
தமிழ்நாட்டில் 195 தனியார் மருத்துவமனைகளில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்யாத சுகாதாரத் துறை பணியாளர்கள், பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி அரசு, தனியார் மருத்துவமனையில் தற்பொழுது போடப்படாது. எனவே பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ஏமாற வேண்டாம் எனச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.