சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவல்களுக்காகவும், மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தலைமையகம் கட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, சென்னை நந்தனத்தில் 8.96 ஏக்கர் நிலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் கட்டப்பட்டது. இந்த தலைமையகக் கட்டடம் தனித்துவமான வடிவமைப்பைக்கொண்டுள்ளது. அடித்தளம் மற்றும் தரைத்தளத்தைத் தவிர்த்து 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் அதிக நாட்கள் உழைக்கும் ஒருங்கிணைந்த கண்ணாடி அமைப்பு முறையில், பிளவுபட்ட காற்றோட்டமான கான்கிரீட் தொகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டடத்திற்குள் வெப்பம் கடத்தப்படுவது குறைவதுடன், குளிர்பதனத்தேவையும் குறைகிறது. மேலும், 2 மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கு, வாகனங்கள் நிறுத்துமிடத்திலேயே மின்னேற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகக் கட்டடம் இன்று(அக்.27) திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இந்த கட்டடத்தை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, துணை மேயர் மு. மகேஷ் குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள "சி.எம்.ஆர்.எல் பவன்" ஓரிரு நாட்களில் திறப்பு!