சென்னை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா (47). சென்னை மத்திய குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் பாண்டியன், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 28ஆம் தேதி, எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை கரோனா வார்டில், வசந்தா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குழந்தையைப் பிரசவித்த மறுநாளே உயிரிழப்பு
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வசந்தாவிற்கு நேற்று (ஆக.4) பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று (ஆக.5) அதிகாலை, வசந்தா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு, அரசு உதவ பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
பெற்றெடுத்த சிசுவுக்கு தாய்ப்பால் ஊட்டும் முன்னரே, பெண் தலைமைக் காவலர் கரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை