பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை பாண்டி பஜாரில், பாஜகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது, அங்கிருந்த விழா மேடையில் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய காணொலியை தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் மாநில மகளிர் அணி சார்பில் 70 அடியில் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டி கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜகவின் மைனாரிட்டி மோட்சா என்ற டிவி சேனல் லோகோவை முருகன் அறிமுகம் செய்தார். இதில், பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், பாஜக துணைத் தலைவர் அர்ஜுனன் மற்றும் விவசாயி அணி தலைவர் நாகராஜ், நடிகை நமீதா உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது, "பலதரப்பட்ட மக்களும் பாஜகவை நோக்கி வருவதற்கு மோடியின் தூய்மையான ஆட்சி தான் காரணம். நீட் தேர்வு மூலம் 13 பேரின் உயிரில் விளையாடியது காங்கிரஸ், திமுக மட்டும் தான்" என்று குற்றஞ்சாட்டினார்.
இன்று பெரியாரின் பிறந்த நாளுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சமூக நீதிக்காகப் போராடிய பெரியாருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் அஜித் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடாது - சட்ட ஆலோசகர் அறிக்கை...!