கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரியிலும் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில், அங்குள்ள தனியார் மதுபானக் கடைகள், மது விற்பனையை சட்டவிரோதமாக மேற்கொண்டது.
இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், 124 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பல கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மதுபானக் கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக செய்தித்தாள்கள், புதுச்சேரி அரசு இணையதளங்களில் தகவல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவமணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மதுக்கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசின் விசாரணை நடந்து வருவதால், மதுக்கடைகளின் விவரங்களை இப்போது வெளியிட முடியாது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மதுக்கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் புதுச்சேரி மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க... உயர் நீதிமன்ற உத்தரவு: குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!