சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் என்பவர் தாக்கல்செய்துள்ள மனுவில், "2010ஆம் ஆண்டு எல்ஐசியின் 'ஜீவன் சாரல்' திட்டத்தில் மாதாந்திர தவணைத் தொகையாக 31 ஆயிரத்து 153 ரூபாய் செலுத்தினால் 2018இல் முதிர்வுத் தொகையாக 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஒப்பந்தத்தின்படி பணம் செலுத்திவந்தேன்.
எட்டு ஆண்டிற்கு 31 லட்சத்து 77 ஆயிரத்து 606 ரூபாய் செலுத்தியுள்ள நிலையில், 2018ஆம் ஆண்டு ராயப்பேட்டை எல்ஐசி கிளையிலிருந்து, தனக்கு முதிர்வுத் தொகையாக 62 லட்சம் ரூபாய்க்கு பதில் 14 லட்சத்து 92 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனவும், அச்சுப்பிழை காரணமாக 62 லட்சம் ரூபாய் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, 'பாலிசியின்போது உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் முதிர்வு' தொகையான 62 லட்சம் ரூபாயை, உயிரோடு இருக்கும் பாலிசிதாரர்களுக்கு வழங்க முடியாது' என விளக்கம் அளித்தனர்.
காப்பீட்டு விதிப்படி 1938, பிரிவு 45, ஒப்பந்தத்தில் பிழை, திருத்தம் இருந்தால் அதை பாலிசிதாரருக்கு மூன்று ஆண்டுகளுக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை எல்ஐசி கடைப்பிடிக்கவில்லை.
அதனால், தனக்கான முதிர்வுத் தொகையை வழங்க எல்ஐசிக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காப்பீட்டு நிறுவனம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், அச்சுப்பிழை காரணமாக தவறாக 62 லட்சம் என மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரிடமிருந்து, பிழை திருத்தம் செய்யாமல் முதிர்வுக் காலம்வரை பாலிசி தொகையை நிறுவனம் பெற்றுள்ளதால் இழப்பீடு பெறவும் மனுதாரருக்கு முழு உரிமை உள்ளது. அதனால், பாலிசி மொத்த தொகையுடன், 2010ஆம் ஆண்டுமுதல் ஆண்டுக்கு 7.5 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து மனுதாரருக்கு எல்ஐசி நிறுவனம் வழங்க வேண்டும்.
அது குறித்த அறிக்கையை பாலிசி நிறுவனம் 60 நாள்களில் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.