விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு பகுதி செயலாளர் பி.தியாகராஜன் உயர்நீதிமன்றத்தில் மனு ஓன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், செய்யாறு தாலுகா, பூஞ்சேரி கிராமத்தில் அரசு உதவியுடன் செயல்படும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தேன்.
ஆனால் பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்ததற்காக அதே பள்ளியில் பகுதி ஆசிரியராக பணிபுரிந்த தனது மனைவியை பள்ளியில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும்.மேலும் மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வட்டார கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில் பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கும் வகையில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை உபயோகப்படுத்திய பின்னர் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவறுதலாக பயன்படுத்த அதே பள்ளிக் கூடத்தில் தொகுப்பூதிய ஆசிரியராக பணியாற்றி வந்த மனுதாரரின் மனைவி பார்வதி, தன்னை நிரந்தர ஆசிரியராக பணியமர்த்த மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என கூறப்பட்டது.
இதையடுத்து மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராத தொகையை 10 நாட்களுக்குள் சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்த வேண்டும் இல்லையென்றால் வருவாய் வசூல் சட்டத்தின் படி மனுதாரரிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.