சென்னை போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்த கணேஷ்குமார் என்பவர் 2016ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், கடந்த 2011-15ஆம் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பணி வாங்கி தருவதாக கூறி ரூ. 95 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்பட்டிருந்தது.
அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, சகாராஜ், பிரபு உள்ளிட்ட நான்கு பேர் மீது 2017ஆம் ஆண்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் என் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’குற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட 2014 - 2015 காலகட்டத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கபட்டுள்ளது. இந்த புகார் ஜோடிக்கப்பட்ட ஒன்று. பணத்தை செந்தில் பாலாஜி எந்த இடத்திலும் நேரடியாக வாங்கவில்லை. புகார் அளித்த நபர் பின் வாசல் வழியாக பணி நியமனம் பெற முயன்றுள்ளார். அது குறித்து காவல்துறை விசாரிக்கவில்லை’ என தெரிவித்தார்.
எனவே அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, குற்றச்சாட்டுக்கு குறித்த முகாந்திரம் உள்ள நிலையில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி விசாரணையை சந்திக்க மட்டரா? என கேள்வி எழுப்பினார். மேலும், தற்போதைய விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவே எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அப்போது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் கூடுதல் நீதிமன்ற உத்தரவுகள் தாக்கல் செய்யவுள்ளதாகவும் எனவே விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து கூடுதல் நீதிமன்ற உத்தரவு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.