கரோனாவைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்தார்.அந்த மனுவில், தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கியது.
முதலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலமாகவும் பின்னர் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இருந்தும் அதிக அளவில் கரோனா பரவியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மார்ச் -ஏப்ரல் ஆகிய மாதங்களில் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது அதிக அளவில் உள்ளது. கரோனா பாதிப்பு தொடங்கிய உடனே தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் கரோனா கட்டுப்படுத்தும் அளவில் இல்லை. நாளுக்குநாள் கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தின் கரோனா பாதித்து உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது போன்று எவ்வித நிவாரணம் வழங்குவது இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் படி 144 தடை உத்தரவு 6 மாதத்திற்கு மட்டுமே அமல்படுத்த முடியும்.
அதன்படி செப்டம்பர் வரை மட்டுமே அமல்படுத்த முடியும். ஏற்கனவே அமல்படுத்திய தடை உத்தரவு காலத்தில் கரோனா கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ஏதாவது குறைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:செப். 7 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை!