சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயிகள் இன்னும் ஏழைகளாவே உள்ளனர்.
விவசாயிகள் விளைவிக்கும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனைக்கு எடுக்கப்படுகிறது. நெல் விவசாயம் அதிகமாக செய்யப்படும் டெல்டா பகுதிகளில், நெல்லை விற்க 10, 15 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் நெல் முழுவதும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் சாலையில் கிடக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளைக் காக்க தமிழ்நாடு முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று (அக்டோபர் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், இது தொடர்பான விரிவான அறிக்கை தயாராக இருப்பதாகவும், அதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, "நீதிமன்றம் வழக்கை எடுத்த பின்னர் மயிலாடுதுறையில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து 90 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியுள்ளனர்" என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இயன்ற அளவு திடீர் சோதனைகளை நடத்துமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அத்துடன், வழக்கை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'தலைமைச் செயலகத்தில் ஐடி ரெய்டு... நேரம் வரும்போது சொல்வேன்' - ராம் மோகன் ராவ்