கரோனா வைரஸ் காரணமாக சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முத்தியால்பேட்டை காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்நபர் முன்னுக்குபின் முரணாகப் பதில் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்துள்ளனர். அதிலிருந்த பையில் கட்டுக்கட்டாக சுமார் 99.5 லட்ச ரூபாய் பணம் இருந்ததைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணத்திற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் அந்நபரையும் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்நபர் மண்ணடி நைனியப்பன் பகுதியைச் சேர்ந்த சாகிப்(32) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்குக் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல் துறையினர் சாகிப்பிடம் எழுதி வாங்கிக்கொண்டு வரும் திங்களன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவரை விடுவித்துள்ளனர்.