சென்னை: சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அனைத்து அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தங்கராஜ், "தமிழ்நாட்டிலுள்ள 140-க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்துவருகிறோம்.
முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு
எங்களுக்கு மாதம் 20 ஆயிரம் 11 மாதங்களுக்குத் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட எந்தப் பலனும் இல்லை.
கௌரவ விரிவுரையாளர்கள் சம வேலைக்குச் சம ஊதியம், பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு அனுப்பப்பட்ட மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (பிப்ரவரி 7) ஒருநாள் போராட்டம் நடத்திவருகிறோம்.
கோரிக்கையை ஏற்கும் வகையில் போராட்டம்
அண்டை மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 35 ஆயிரம் வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள விவசாய பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அதிகளவில் சம்பளம் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் போராட்டம் நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் சாந்திஸ்ரீ