சென்னை : நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு- கவுசல்யா தம்பதியின் மகளான கோதை வாஹ்ருணி ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
கோதை வாஹ்ருணி சுடோகு விளையாட்டில் ஆர்வமாக இருந்ததைக் கண்ட அவரது பெற்றோர் சுடோகு போல் உள்ள ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆர்வத்துடன் விளையாடத் தொடங்கிய கோதை அதில் நன்கு கற்று தேர்ந்தார்.
இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியைத் தொடங்கிய கோதையின் சாதனைப் பயணம் இன்று கின்னஸ் சாதனை வரை நீண்டு கொண்டிருக்கிறது.
பல கோணங்கள், பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை தனது விரல்களால் சில விநாடிகளில் வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.
குறிப்பாக ‘ஹூலா ஹூபிங்’ எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டே ‘டெட்ரா ஹெட்ரான்’ எனப்படும் முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 விநாடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
18 வயது இளைஞர் 13.86 விநாடியில் நிகழ்த்திய சாதனையை கோதை 6.88 விநாடியில் செய்து காண்பித்து சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.
இதையும் படிங்க : சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றம்