மத்திய அரசு சமீபத்தில் மார்ச் 2020க்கு ஜிஎஸ்டி(சரக்கு மற்றும் சேவை வரி) இழப்பீடாக ரூ.13 ஆயிரத்து 806 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.ஒரு லட்சத்து 65ஆயிரத்து 302 கோடி ஆகும். 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ. 95 ஆயிரத்து 444 கோடி ஆகும். 2019-20க்கான இழப்பீட்டை விடுவிக்க, 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் தொகையின் நிலுவைத் தொகையும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு ரூ.33 ஆயிரத்து 412 கோடியை இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து இழப்பீட்டு நிதிக்கு மாற்றியுள்ளது என மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2019-20 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக ரூ. 12 ஆயிரத்து 305 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு ரூ. 1057 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கியுள்ளது.