சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது அன்னைக்கேனி குளம். எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தண்ணீர் தேவையைப் போக்கிவந்த இந்த குளம் சமீப காலங்களில் குப்பைகளாலும், புற்களாலும் சூழ்ந்து மக்கள் பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும் இடமாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், ஐநா சபையின் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கிரண்ட்ஃபோஸ் இந்தியா அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
அதன்படி, இந்த அமைப்பு சுற்றுச்சூழல் அறக்கட்டளை இந்தியாவுடன் இணைந்து சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள அன்னைக்கேனி குளத்தினை தூர்வாரி, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அறக்கட்டளை இந்தியாவின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "சென்னையின் நீர்நிலைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் மிகப்பெரிய சவாலை நாங்கள் தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்த திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் ஒரு மிகப்பெரிய திட்டம்” என்றார்.
இதையும் படிங்க: ரூ. 23.90 கோடியில் ஏரி, குளங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்!