சென்னை: பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் வகையிலும் கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தையும் இன்று (04.01.2023) பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், "பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் தொடர்பான குறைகளை இணையவழியாகப் பதிவு செய்திட ஏதுவாக இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் 'குறைகளை பதிவிடுக' எனும் வசதியும், 044 – 28339999 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கும் வகையில் குறைகேட்பு மையம் கடந்த மே 25, 2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இம்மையத்திற்கு வரப்பெற்ற புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் செயல்பாட்டினை விரிவுபடுத்திடும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோயில்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை குறைகளைத் தெரிவிக்கும் வகையிலும் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையும், 24 மணி நேர உதவி மையத்தின் சேவையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இம்மையத்தில் பெறப்படும் புகார்களுக்குப் புகார் எண் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுவதோடு, மனுதாரருக்குக் குறுஞ்செய்தி மூலம் ஒப்புகையும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்சமயம் பக்தர்களிடமிருந்து வரப்பெறும் ஆலோசனைகள் மற்றும் புகார்களை ஏற்று ஒரே நேரத்தில் அழைப்புகள் வந்தாலும் பதிலளிப்பதற்கு 5 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்படும்.
இம்மையத்தின் செயல்பாடுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர்கள் ஆய்வு மேற்கொள்வர். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏற்கனவே குறைகளைத் தெரிவிக்க அறிவிக்கப்பட்டிருந்த 044 – 2833 9999 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டாலும் குரல் சேவையின் மூலம் 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தெரிவித்து, அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகளை ஏற்றும், புகார்களை சரிசெய்தும் துறையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கும், பக்தர்கள் திருக்கோயிலின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் இடையே நட்புணர்வும் ஏற்படும். குற்ற நிகழ்வுகளைத் தடுப்பதும், ஏற்கனவே நடந்த குற்ற நிகழ்வுகளில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதிலும் முன்னுரிமை அளித்து முதன்மையான அரசாக இந்த அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 281 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. கடத்தப்பட்டு வெளிநாடுகளில் இருக்கின்ற 161 சிலைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகளுக்கும், இப்பொழுது மீட்கப்பட்டிருக்கின்ற சிலைகளுக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தோடு ஒரு சிறப்புக் குறியீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்மூலம் அந்த சிலைகள் மீண்டும் கடத்தப்பட்டால் அந்த சிலைகள் எங்கு இருக்கிறது என அடையாளம் காட்டுவதற்கும், அதனை உடனடியாக மீட்பதற்கும் காவல்துறையினரோடு இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும். இதுதொடர்பாக நானும், துறையின் உயர் அலுவலர்களும், காவல்துறை இயக்குநருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து விரிவாகக் கலந்தாலோசிப்பது ஏற்புடையது அல்ல" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது உள்ள குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் - கனிமொழி எம்.பி.