கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே வருவோரை கண்காணிக்க, காவல் துறையினர் பல இடங்களில் தடுப்புகளை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சமயங்களில், ஆம்புலன்ஸ் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, காவல் துறையினர் தனிப்பாதை ஒன்றைத் தடுப்புகள் அமைத்து ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸூக்கு வழிவிட வேண்டும் என்ற முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்புலன்ஸூக்கு வழிவிட்டுச் சென்ற வீடியோவை சென்னை காவல் துறை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
கடந்த 29ஆம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
சென்னை - கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் முதலமைச்சர் சென்ற போது, சைரன் ஒலித்தபடியே ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வந்துள்ளது. இதைப் பார்த்த முதலமைச்சர், உடனடியாக ஆம்புலன்ஸூக்கு வழிவிட்டார். இந்தக் காணொலியை சென்னை காவல் துறை வெளியிட்டதையடுத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் முதலமைச்சரைப் பாராட்டி வருகின்றனர்.