சென்னை: மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதியில் வசித்த தம்பதியின் 13 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். மகளை விட்டு பெற்றோர் இருவரும் பிரிந்த நிலையில் அந்த 13 வயது சிறுமி தனது தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார். கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் சார்பில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாத்தா, தாத்தாவின் மகன்களான மூன்று சித்தப்பாக்கள் மற்றும் சித்தப்பாக்களின் மகன்கள் இருவர் உள்பட 6 பேருக்கு எதிராக மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை தரப்பில் நிரூபிக்கபட்டுள்ளது.
சிறுமியின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்கள் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையும், தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பின் தெரிவித்துள்ளார். தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கடத்தல்: 4 மாநிலங்களில் இருந்து 6 அஸ்ஸாம் சிறுமிகள் மீட்பு