மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் கிராமசபை கூட்டம் நடத்த முடியாமல், குடிமராமத்து போன்ற பணிகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு, உணவு விடுதிகள் உள்பட அனைத்து கடைகளும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள இந்தச் சூழலில், கிராம சபை கூட்டத்தை ரத்து செய்திருப்பது சட்ட விரோத செயலாகும்.
இதன் விளைவாக கிராமப்புறங்களில் நடக்கவிருக்கும் பல்வேறு வேலைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.