சென்னை: தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கிராமசபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த வளாகத்திலும் நடத்திடக்கூடாது எனவும் அறிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "குடியரசுத் தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி குடியரசு தினத்தன்று ஜனவரி 26ஆம் தேதி காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றைக் கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்திட வேண்டும். கிராம சபைக் கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 26ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டம், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி (Namma Grama Sabhai Mobile App) மூலம் உள்ளீடு செய்திட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு