சென்னை: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள தகவலின் படி,
தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்கள் சிலரை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து.
அரசு பதிவு பெறாத மற்றும் சட்டவிரோதமான முகவர்கள், மியன்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அவர்களை அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு இந்த இளைஞர்கள், ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை (ஆன்லைன் மோசடி) செய்ய வலியுறுத்தப்படுகின்றனர்.
அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற தகவல் வரப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகின்றது. அந்த வகையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் மூலமாக தாய்லாந்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 13 இளைஞர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
இச்சூழ்நிலையில், தற்போது கம்போடியா நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று செய்தி வர பெற்றதை தொடர்ந்து, அங்கு உள்ள தமிழ் இளைஞர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளது.
மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த கம்போடியா நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரவேண்டிய நபர்கள் குறித்த தொலைபேசி எண்கள் அல்லது அவர்கள் அங்கு பணிபுரியும் நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை பின்வரும் எண்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.+91-9600023645 +91-8760248625 044-28515288.
இந்நிலையில் இதுபோன்று சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க:‘ மழைநீர் வடிகால் பணிகளைப் பருவமழைக்கும் முன்னால் முடிக்க வேண்டும்’ - இறையன்பு அறிவுறுத்தல்