சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "விநாயகர் சதுர்த்தி விழாவை பெரிய அளவில் மக்கள் கொண்டாட இருக்கிறார்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். சேலம் 8 வழிச்சாலை பயண நேரத்தை குறைப்பதற்கு மிகப்பெரிய சாலையாக இருக்கிற போகிறது. சிறு, குறு தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்கும் இருக்க வேண்டும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது 8 வழி சாலையை எதிர்த்து பேசி உள்ளார். எட்டு வழி சாலையை வைத்து மிகப் பெரிய அரசியலை முன்னெடுத்துள்ளனர். இப்பொழுது அமைச்சராக இருக்கக்கூடிய ஏ.வ.வேலு, கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு.
பச்சை துண்டை போட்டவர்கள் எல்லாம் விவசாயி என்று வந்துவிட்டார்கள் என அமைச்சர் ஏ.வ.வேலு பேசி இருப்பது விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. பச்சை துண்டை போட் முதலமைச்சரையும் சேர்த்து தான் அமைச்சர் கூறி இருக்கிறார். நம்மளுக்கெல்லாம் தெரியும் முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயி கிடையாது. எட்டு வழி சாலை விவகாரத்தில் தமிழக அரசு நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையம் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக பரந்தூர் உட்பட இரண்டு இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். ஆனால் பரந்தூர் மட்டும் தேர்வு செய்துவிட்டு இன்னொரு இடத்தை திமுக அரசு விட்டு விட்டது. மாநில அரசின் திட்டமிடுதல் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாததால் இந்த திட்டத்திற்கு தடை போடுகின்றன.
மத்திய அரசு விமான நிலையத்தை அமைப்பதற்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது பரந்தூர், மாத்தூர் இரண்டு இடங்களை தேர்வு செய்து வைத்து இருந்தனர். மாத்தூரையும் பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம்.
தமிழகத்தின் கடந்த மூன்று மாதங்களில் சொந்த வருமானம் 52% உயர்ந்துள்ளது. இந்தியாவின் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 43 சதவீதம் தனி வருமானம் உயர்ந்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையம் போன்ற நல்ல திட்டங்களை எதிர்ப்பதால் மற்ற திட்டங்கள் பாதிப்படைக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய அரசு அதிகாரியாக தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக மக்களிடம் கருத்துக்களை கேட்டு செயல்படுவார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எந்த காலகட்டத்திலும் பாஜக தலையீடு இல்லை. இப்போதும் இல்லை. அதிமுகவில் உள்ள தலைவர்கள் தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி எடுத்துச் செல்லும் போது அதிமுக பலமாக இருக்கும்.
உச்சநீதிமன்றம் வழிகாட்டியின் படி பிரிக்ஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் அரசியல் செய்திருக்கிறார். அமைச்சர் பொதுமக்களை கொச்சையாக பேசியுள்ளார். அமைச்சர் செய்தது அரசியல் தான். அரசியல் செய்வது ஒன்றும் தவறு கிடையாது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஸ்டாலின் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என கூறினார். அமைச்சர் மீது செருப்பு வீசப்பட்டதால் அதனுடைய தன்மை மாறிவிட்டது. ஆடியோவில் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்" என கூறினார்.
இதையும் படிங்க: தற்கொலை, விபத்துகளால் உயிரிழப்பு... தமிழ்நாட்டிற்கு 2ஆம் இடம்... அதிரவைக்கும் புள்ளிவிவரம்