ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு முடித்த பின்னர் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேரும்போது அவர்களுக்கு படிக்கும் திறன் குறைவாக உள்ளது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பாடு அடையவில்லை எனத்தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனை அதிகரிக்கும் வகையில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரத்தை, அப்பகுதியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை, கற்பிக்கும் திறன் போன்றவை, அதே வளாகத்தில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் கண்காணித்திட அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களின் ஊதியம் மற்றும் பயன்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரேனும் விடுப்பு எடுப்பது, அவசர பணி நிமித்தமாக வட்டார கல்வி அலுவலகம், வட்டார வளமையம் செல்வது அல்லது பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள சென்றாலும் ஆசிரியர்களை மாற்று ஏற்பாடு செய்திட கோருவது ஆகியவை அப்பகுதியில் இருக்கும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன் அனுமதியோடு செயல்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக வளாகத்தில் உள்ள மாணவர்களது கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, கல்வித் தரத்தினை உயர்த்த உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.