தமிழ்நாட்டில் கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, இதில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியலினத்தவர்களுக்கு (SC) 15%, அதில், பட்டியல் பிரிவுகளில் ஒன்றான அருந்ததியருக்கு SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியும், கடந்த 10 ஆண்டு கால வளர்ச்சியடைந்த மக்கள் எண்ணிக்கையை கருத்தில்கொண்டும் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 21 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்
இதுதொடர்பாக தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 21 விழுக்காடாக உயர்த்துக! தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள மக்கள்தொகை ஏழு கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 எனக் கண்டறியப்பட்டது. அதில் பட்டியலினப் பிரிவினரின் மொத்த மக்கள்தொகை ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 ஆகும். இது மொத்த மக்கள் தொகையில் 20.01% ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த அம்மக்களின் எண்ணிக்கையையும் உள்ளடக்கினால் அது இப்போது குறைந்தது 21% ஆக இருக்கும். எனவே பட்டியலின வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்". எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவ பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு... சம நீதி வழங்க இது வழிவகுக்கும்!