சென்னை: அரசு சின்னங்களை தனியார் வாகனங்களில் ஒட்டி சாலை விதிமீறல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் 'G' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனியார் வாகனங்களில் அரசு சின்னங்களை ஒட்டிக்கொண்டு பலர் சாலை விதிமீறல்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக சாலை விதிமீறல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர காரணமாக உள்ளது. எனவே, தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள் ஒட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: டெங்குவால் சிறுவன் பலி; சென்னையில் தீவிரமடையும் கொசு ஒழிப்புப்பணி!
அப்போது நீதிபதிகள், தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்கள் ஒட்டப்பட்டுள்ளதை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோர முடியும் என தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் தரப்பில், மனுவில் கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதே போன்ற மற்றொரு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அரசு வாகனங்கள் இல்லாமல் தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள் உபயோகப்படுத்தியது தெரியவந்தால், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஹார்ட் அட்டாக் ஏற்படுவதில் இருந்து காத்துக் கொள்வது எப்படி? நிபுணர்கள் கூறும் ஆலோசனை!