சென்னை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில், திமுக ஆட்சி அமைந்த உடன் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பிலும் புகார்கள் கிளம்பியதைத் தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அரசு அறிவித்தது.
ஆனால், பணியில் இருந்த ஆசிரியர்கள் தொடக்க கல்வித்துறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலை இருந்தன. இந்நிலையில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், '2022-23ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளைத்தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி, தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மைக்குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம்.
இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாதபோது தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம். இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் ரூ.5,000 ஆயிரம் சம்பளம் வழங்கலாம்.
பள்ளி மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள் ஒருங்கிணைந்த இயக்கக நிர்வாகத்தின்கீழ் செயல்படுவதால் , இச்சிறப்பாசிரியர்களின் பணிக்காலம் ஆண்டிற்கு 11 மாதங்கள் என்பதால் இச்சிறப்பாசிரியர்களுக்கான பிழைப்பூதிய மொத்தச்செலவு ரூ.13.10 கோடியினை நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இத்தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.
தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாளுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து வழங்கிடவும், பயிற்சி நிறைவிற்குப்பின் இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதி வழங்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு...