தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பிளஸ்டூ பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. பிளஸ்டூ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்க அதிகாரி கூறியதாவது,
தமிழகத்தில் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும், 518 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும், 14 அரசுக் கல்லூரிகளும், 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் 4 லட்சத்து 40 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் 15 ந் தேதி முதல் வழங்கும் பணி துவக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் 10 வேலை நாட்கள் விண்ணப்பங்கள் தொடர்ந்து வழங்கப்படும். அதன் பின்னர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள துறைகளுக்கான இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்.
கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடம் தவிர்த்து, பிற பாடங்களின் மதிப் பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு வரை பள்ளிக் கல்வித் துறையில் பிளஸ்டூ வகுப்பு மாணவர்களுக்கு 1200 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு 600 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான மதிப்பெண்கள் தவிர்த்து, பிற பாடங்களுக்கு உரிய 400 மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயார் செய்து வெளியிடப்படும். இதற்குரிய விதி முறைகள் விரைவில் தமிழக அரசால் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 74 ஆயிரத்து 500 இடங்கள் உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பக் கட்டணமாக 50 வசூல் செய்யப்படும். விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இளங்கலை பட்டப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மேலும் இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம், என்றார்.
அதேபோல் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 15 ந் தேதி முதல் அந்தக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 15 ந் தேதி முதல் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.