சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று (நவ.18) காலை 10 மணிக்கு துவங்கியது. அந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை, மீண்டும் நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அதன்படி, எந்த வித காரணமும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, சட்டப்பேரையில் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய நிலையில், ஆளுநர் திடீர் டெல்லி பயணம் செல்ல உள்ளார்.
இதன் அடிப்படையில், இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, நாளை (நவ.20) விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.