சென்னை: தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநரின் உரை மட்டுமின்றி, சமீப காலமாகவே அவரது பேச்சுக்கள் முழு அரசியல்வாதி போலவே உள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் அத்துமீறி பேசி வருகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள், திராவிட நாடு என்பது கிடையாது என கூறி, அதற்கு எதிராக அவர் பேசிய வார்த்தைகள் அனைவரும் அறிந்ததே. தற்போது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்களை மறைமுகமாக சாடுவது போல் அவரது பேச்சுக்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சரியல்ல என ஆளுநர் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய அரசு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாட்டிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன எனவும், சிறந்த 100 கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வியில் சிறப்பாக விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் முறையாக அறியவில்லையோ? சமீபத்தில் நிதி ஆயோக் வெளியீட்டு அறிக்கையில் கூட தமிழகத்தில் சிறந்த கல்வி தரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு பயணங்களை தமிழக முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டுள்ளார்? பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். சீனா, ஜப்பான் தைவான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். அப்படியானால், ஆளுநர் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்புகிறாரா? என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இதற்கு பாஜக தான் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். முதலமைச்சர் மீதான விமர்சனத்தை பிரதமர் மீதான விமர்சனமாக பார்க்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டின் மீது மிகப்பெரும் நம்பிக்கை உள்ளது. சர்ச்சைகளுக்கு ஆளுநர் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். துணைவேந்தர் மாநாட்டை அரசியலுக்காக அவர் பயன்படுத்தியுள்ளார்.
முதலீட்டுக்கு உகந்த சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாலும், அனைத்து தரவுகளில் அடிப்படையிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்வதால் முதலீடு செய்ய வரக்கூடிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை விரும்புகின்றன. பெரு நிறுவனங்களுக்கு ஏற்ற மனித வளம் மற்றும் திறன்கள் இங்கு உள்ளன. அரசியலுக்கு செல்ல விருப்பம் இருந்தால் தமிழக ஆளுநர் அதற்கு ஆளுநர் மாளிகையை பயன்படுத்தக்கூடாது. ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வர வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: "சிஎம் இருக்காரான்னு பாக்குறேன்" கேட் ஏறி குதித்த புதுச்சேரி எம்எல்ஏ நேரு!