சென்னை: நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பு வணக்கம் என்று தமிழில் தனது அறிமுக உரையை தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் தனது உரையை தொடங்கிய உடன் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு vs தமிழகம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்கங்களை எழுப்பினர்.
இதனால் அவையில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. அதோடு ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் தனது உரையை தமிழில் தொடர்ந்து வாசித்து வந்தார்.
அப்போது, அரசின் குறிப்பின் பக்கம் எண் 47-ல் "மதநல்லிணக்கம் பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெரு ம் தலைவர்களின் கொள்கைகள் போற்றும் கோட்பாடுகளை பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு பின்பற்றி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை வாசித்த ஆளுநர் மதநல்லிணக்கம், திராவிட மாடல் என்ற வார்த்தைகளை புறக்கணித்துவிட்டார்.
இதனால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் சில தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அதில், சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார். அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் ரவி சட்டப்பேரவை அரங்கில் இருந்து பாதியில் வெளியேறினார். இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்