சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த நாள் இன்று (அக்.15) கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, கிண்டி, ஆளுநர் மாளிகையில் அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செய்தார். அப்போது அவர் அப்துல்கலாமின் இந்தியா குறித்த கனவு, தொலை நோக்குப் பார்வை ஆகியவை குறித்து நினைவு கூர்ந்தார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அப்துல் கலாம் தனது முழு வாழ்க்கையினை அறிவியல் சமூகத்துக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்பணித்தார். மாணவர்களும் இளைஞர்களும் டாக்டர் கலாமின் புகழ்பெற்ற மந்திரமான ’கனவை நனவாக்குங்கள்’ என்ற மந்திரத்தைப் பின்பற்ற வேண்டும்.
அர்ப்பணிப்பு, பக்தி, உன்னதமான எண்ணங்கள், தேசபக்தி, வாழ்க்கையில் உயர்வான லட்சியம் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் டாக்டர் கலாமின் பணியை இளைய தலைமுறையினர் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
ஒருங்கிணைந்த சிந்தனையை வளர்த்து, நமது நாட்டை முதலிடம் பெறச்செய்வோம். இந்தியாவை முன்னேறும், வலிமையான நாடாக மாற்ற எண்ணங்கள், செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: லயோலா கல்லூரி புதிய கட்டடம் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு