லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அங்கு இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரைக் குவித்துள்ளன.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர உயர் மட்ட அளவில் தொடர் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
இந்நிலையில் இரு நாட்டு ராணுவத்திற்குமிடையே நேற்று (ஜூன் 15) ஏற்பட்ட சண்டையில் இந்திய ராணுவ அலுவலர், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி என்பவர் வீர மரணம் அடைந்தார்.
சீன எல்லையில் வீர மரணமடைந்த பழனிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 'லடாக் பகுதியில் நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, நாட்டிற்காக வீரமரணமடைந்த வீரரை இந்நாட்டிற்கு அளித்த பெருமை கொண்ட குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டைப் பாதுகாப்பதற்காக வீரமரணமடைந்த அவரது வீரமும், தியாகமும் என்றளவும் அனைவரின் மனதிலும் துதிக்கப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.