காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி. ரவியை மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜி. ரவி, 27 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் மற்றும் 7 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் பெற்றவர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல நிர்வாகப்பதவிகளை வகித்தார். டீன், தொழில் மற்றும் ஆலோசனை, இயற்பியல் துறை, இயக்குநர், IQAC மற்றும் பல்வேறு வாரியங்களுக்கான தலைவராக இருந்தார். அவர் ரூ.1.54 கோடி மதிப்பிலான எட்டு ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் மற்றும் ஸ்கோபஸ் அட்டவணையிடப்பட்ட இதழ்களில் சுமார் 400 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் 363 கட்டுரைகளை சமர்ப்பித்த அவர் எட்டு காப்புரிமைகளை வைத்திருக்கிறார். 2021ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள தேசிய சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தால் அப்துல்கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் ஜப்பானின் ஷிசுவோகா பல்கலைக்கழகத்தின் கெளரவ விருந்தினர் பேராசிரியராகவும் வருகைப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 விருதுகளைப் பெற்றுள்ளார். அழகப்பா பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் முனைவர் பட்டம் (D.Sc.) வழங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஜி. ரவியை மூன்று ஆண்டுகளுக்கு நியமித்து அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டி. ஆறுமுகம் என்பவரை ஆளுநர் ஆர். என். ரவி நியமனம் செய்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெயிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுமார் 32 ஆண்டுகள் சிறந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் மற்றும் 11 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்ட ஆறுமுகம் தற்போது கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தின் தோட்டக்கலைத் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகம் சர்வதேச அளவில் 35 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மேலும் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 180 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 13 ஆராய்ச்சி மற்றும் கல்வி நிகழ்வுகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ரூ.15.56 கோடி மதிப்பில் 14 நிதியுதவி ஆராய்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 2020-2021இல் கனடாவின் சர்வதேச மொரிங்கா ஆராய்ச்சி நிறுவனத்தால் மொரிங்கா விஞ்ஞானி விருது அவருக்கு வழங்கப்பட்டது மற்றும் அமெரிக்கன் வாழ்க்கை வரலாற்று நிறுவனம் 2003இல் ஆலோசகர்களின் ஆராய்ச்சி வாரியத்தின் கெளரவ பெல்லோஷிப் வழங்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக என். சந்திரசேகர் என்பவரை ஆளுநர் ஆர்.என். ரவி மூன்றாண்டுகளுக்கு நியமித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “என். சந்திரசேகர், 35 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் மற்றும் 17 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்டவர். மேலும் அவர் பல நிர்வாகப் பதவிகளை வகித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி டீன் மற்றும் கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் டீன் பதவிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011-2012இல் UGC வழங்கிய இந்தோ-ஹங்கேரிய கல்வி பரிவர்த்தனை பெல்லோஷிப், 1994இல் பிரேசிலின் சர்வதேச வளர்ச்சிக்கான (AGID) சங்கத்தின் வில்லியம் கோல்ட்ஸ்மித் விருது, IGU - CS4IRஇன் இந்திய ஜியோபிசிகல் யூனியன் பெல்லோஷிப் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
உயர்கல்வித் துறையில் சிறந்த நிர்வாக, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்ட அவர், 21 Ph.D.களை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். மேலும் அவர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக 13 வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்வித்தொலைக்காட்சி விவகாரத்தில் அரசாங்கமும், நானும் ஏமாந்துவிடமாட்டோம்... டிரெண்டிங் குறித்து அன்பில் மகேஷ்