சென்னை: மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச்சந்தித்த அவர், ''2022-23ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்காக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மொத்தம் 87ஆயிரத்து 764 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில், துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுநர் பட்டபடிப்பு, மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிப்ளமோ செவிலியர் படிப்பு, டிப்ளமோ ஆப்டோமெட்ரி படிப்பு, பாராமெடிக்கல் டிப்ளமோ/சான்றிதழ் படிப்புகள் ஆகிய மேற்கண்ட படிப்புகளுக்கு 121 அரசு கல்லூரிகளில் 2ஆயிரத்து 526 இடங்களுக்கும், 348 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 15ஆயிரத்து 307 இடங்களுக்கு விண்ணப்பங்களும், சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுபிரிவு) 58ஆயிரத்து 980 ஆகும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் 535ஆகவும், நிராகரிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 304ஆகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 58ஆயிரத்து 141 ஆக உள்ளது. அதில், ஆண்லைன் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 15ஆயிரத்து 064 ஆகவும், பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 43ஆயிரத்து 077 ஆகவும் இருக்கிறது.
மருந்தாளுநர் பட்டயப்படிப்புகளுக்கு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (பொதுப்பிரிவு) 5ஆயிரத்து 271 ஆகும். அதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் 25 ஆகவும், நிராகரிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 40 ஆகவும், ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 5ஆயிரத்து 206ஆகவும் உள்ளது. அதில் ஆண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 1561 ஆகவும், பெண் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 3ஆயிரத்து 645ஆகவும் உள்ளது.
கடந்த ஆண்டைவிட 2ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. மேலும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தேவையைப் பொறுத்து வரும் ஆண்டில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் படிக்கும் அனைவருக்கும் அரசால் பணி நியமனம் வழங்க முடியாது. இந்தப் படிப்புகளுக்கு தனியார் மருத்துவமனைகள், வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பு இருக்கிறது. அதில் சேர்ந்து பணி புரியலாம்.
கரோனா தொற்று பாதிப்பு தற்பொழுது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுஇடங்களில் மக்கள் கூடும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை.
அனைத்து வகையிலான அத்தியாவசிய மருந்துகளும் கையிருப்பு உள்ளன. மருந்து எடுத்துச்செல்வதற்கான கால நேரத்திற்குள் அத்தியாவசிய மருந்து தேவை இருப்பின் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் சந்தையில் வாங்கி கொள்ளவும் அனுமதியுள்ளது.
வரும் ஆண்டுகளில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வு தனியார் உதவி இல்லாமல் அரசே நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: 'மின் கட்டண உயர்வு அரசியல் ஆக்கப்படுகிறது' - அமைச்சர் செந்தில் பாலாஜி