சென்னை சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதான நடைமுறை மூலதனத்தை வழங்கத் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உடன் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் எளிதில் கடன் பெற வசதியாகத் தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தாய்கோ வங்கி இணைந்து எளிமையான முறையில் கடன் வழங்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தொழில்துறை உள்கட்டமைப்பு முன்னெடுப்பு
இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், " தமிழ்நாடு சிட்கோ உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மாநிலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வண்ணம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது தொழில்துறை உள்கட்டமைப்பு முன்னெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் மனைகளைக் காலதாமதமின்றி பெறுவதோடு, தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால கடனுதவியும் வழங்கப்படும். இதன் மூலமாகத் தொழில் முனைவோர்கள் காலதாமதமின்றி விரைந்து தங்களது தொழிற்சாலைகளை நிறுவ முடியும் எனத் தெரிவித்தார்.
தொழில் முனைவோருக்கு வங்கிகள் விரைவாகக் கடன் வழங்க
மேலும், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, நில மதிப்பை 60 சதவீதம் குறைத்து வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். சிறு, குறு தொழில் முனைவோருக்கு வங்கிகள் விரைவாகக் கடன் வழங்க ஏற்கனவே பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததோடு, வங்கிகள் கூட்டமைப்புடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி காலம் தாழ்த்தாமல் கடனுதவி வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்களின் படி மாநிலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடனுக்கான நிதி உதவியுடன் எளிதாக நடைமுறை மூலதனத்தையும் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: IAF MI 17 V5: பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்கள்!