தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகிச்சைக்குரிய கட்டணம் எவ்வளவு என்பதை அரசு நிர்ணயம் செய்யவில்லை என்பதால்தான், ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் விருப்பம்போல் கட்டணத்தை வசூல் செய்வதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநரும், நல்வாழ்வுச் சங்கத்தின் மாநிலத் தலைவருமான மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியவை பின்வருமாறு:
கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளது. சென்னையில் இதனை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். மக்களை 20 நாள்கள் அடைத்துவைத்து விட்டு, பின்னர் கோயம்பேடு, காசிமேடு, திருவான்மியூர் மார்க்கெட் ஆகியவற்றைத் திறந்ததன் மூலம் நோய்த் தொற்று பரவும் நிலை ஏற்படுகிறது.
இதற்கு யாரைக் குற்றம் சொல்வது என தெரியவில்லை. மனிதர்களாலே இந்தத் தொற்று அதிகளவில் பரவுவது போல் தெரிகிறது. அரசு எந்தவித சரியான திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகளைச் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்க முடியும்.
ஆகவே, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். நோய்த் தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆரம்பக்கட்ட சிகிச்சை, தீவிரச் சிகிச்சை என அனைத்திற்கும் தனித்தனியாக கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி, (மாவட்ட) கருவூலத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதைக் காண்பித்த பின், மருத்துவமனைகள் அந்நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அம்மருத்துவமனைகள் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கேற்றாற்போல் நோயாளி கருவூலத்தில் செலுத்திய பணத்தினை, அரசு தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வழங்க வேண்டும்.
பில்ரோத் மருத்துவமனையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தை கரோனா வைரஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சாதாரண சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அங்கு அனுமதிக்கலாம். இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். பொதுமக்களும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதைக் குறைக்கலாம்.
நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனையை மட்டுமே நம்பாமல், அரசு பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தன்னார்வலர்களைப் பயன்படுத்தி தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் முகக்கவசங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
மருத்துவமனைகள் வென்டிலேட்டர் போன்றவற்றை வாங்கும் செலவைவிட முகக்கவசங்களை வாங்கும் செலவு குறைவு தான் என்பதால், அதனை மக்களுக்குத் தாராளமாக வழங்கலாம். கூட்டம் கூடுவதைத் தவிர்த்தால், கரோனா வைரஸ் சங்கிலித் தொடர்போல் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். சங்கிலித் தொடரினை நிறுத்தாமல் மருத்துவமனைக்கு அதிகளவில் நோயாளிகள் வருகிறார்கள் எனக் கூறினால் அது யாருடைய தவறு?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள தனியார் மருத்துவமனைகளை அழைத்துப் பேசி, கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அரசு அழைத்துப் பேசினாலே தனியார் மருத்துவமனைகள், நிர்ணயிக்கும் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளும். மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அரசு அதுகுறித்து வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்க வேண்டும்.
சமூகப் பரவல் ஏற்படவில்லை என அரசு தொடர்ந்து கூறி வருகிறது. முதலில் விமானம் மூலம் வந்தவர்களுக்கு வந்த கரோனா, அவரால் அவரது உறவினருக்கும் நோய்த் தொற்று வந்தது என அரசு கூறியது. இதனை எப்படி சமூகப் பரவல் இல்லை என மக்கள் நம்புவார்கள். மக்களிடம் முதலில் நம்பகத்தன்மையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சென்னையில் பகுதிவாரியாகப் பிரித்து சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம் ஆகியவற்றில் நோய்த் தொற்றினை குறைத்து பச்சை மண்டலமாக உருவாக்க வேண்டும். மேலும், இதற்காக பொதுவான ஒரு தொடர்புத் தளத்தை உருவாக்கி, பொதுமக்களின் அனைத்துச் சந்தேகங்களுக்கும் தீர்வு அளிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.