சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஒதுக்கீட்டில் 80 விழுக்காடு பேர் ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் படித்து, நீட் தேர்விற்கு தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுவர்கள் என்பதும், நடப்பாண்டில் அரசுப் பள்ளியில் படித்து நேரடியாக தேர்வு எழுதியவர்கள் குறைந்த அளவிலேயே மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் எனவும் தெரியவருகிறது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 13ஆயிரத்து 622 பேர் ஏற்கெனவே முந்தைய ஆண்டுகளில் 12ஆம் வகுப்பில் படித்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவப்படிப்பு சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டிடங்களுக்கு விண்ணப்பித்த 26ஆயிரம் மாணவர்களில், 13ஆயிரம் மாணவர்கள் பலமுறை நீட் தேர்வு எழுதி, இந்த ஆண்டும் கலந்தாய்வுக்கு போட்டியிடுவது தெரியவந்துள்ளது.
மருத்துவப் படிப்பு சேர்க்கையில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வை புதிதாக எழுதிய மாணவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 13ஆயிரத்து 380 பேர் என்றும்; சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 8ஆயிரத்து 674 பேர் என்பதும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட தகவல் மூலமாக தெரிய வந்துள்ளது.
மேலும், 13 ஆயிரத்து 622 மாணவர்கள், ஏற்கெனவே பலமுறை நீட் தேர்வு எழுதி, இந்த ஆண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று கலந்தாய்வில் போட்டியிடுகின்றனர்.
அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான மருத்துவக் கலந்தாய்விலும், 2020 -2021ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்களே அதிகளவில் இடங்களைப் பெற்றனர்.
2021-22ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், கம்ப்யூட்டர் மூலமாகவும் நீட் தேர்வு பயிற்சி நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பயிற்சியை பெற்ற மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெறவில்லை. இதனால், முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச்சென்று ஓராண்டு பயிற்சி பெற்ற பின்னர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைப் புரிந்துள்ளனர்.
2019-2020, 2020-2021ஆம் கல்வியாண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்து, இந்த முறையும் மீண்டும் தேர்வு எழுதியவர்கள் 80 விழுக்காட்டிற்கும் மேல் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். 2020-21ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 68 மாணவர்கள் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்தனர்.
அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்குப் போதிய பயிற்சி தரப்படாததால், தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பணம் செலவழித்து விட்டே, மருத்துவப் படிப்புகளில் சேரும் சூழ்நிலை உள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் சலுகை..!