சென்னை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 247 அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''இன்று மிகவும் முக்கியமான நாள் இது, ஐஐடி, என்ஐடி, தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வது என்பது அத்தி பூத்தாற்போல் நடக்கக் கூடியது. ஆனால், இன்று மாதிரி பள்ளிகள் மூலம் மாணவர்கள் கவனத்துடன் படித்து, ஆசிரியர்கள் மிகப்பெரிய பங்காற்றி இன்று இதனை செய்து காட்டி உள்ளனர்.
இதை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்வது தான் முதல் இலக்கு. கடந்த ஆண்டு 15 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சாதனை.
வரும் காலங்களில் இன்னும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே பிப்ரவரி மாதத்தில் தொடக்கப்பள்ளிகளை புதுப்பிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மேம்பாடு திட்டம் குறித்து பொதுப்பணித்துறை உடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
இந்த மாத இறுதியில் எங்கு எல்லாம் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று செயல்படுத்த தொடங்கி வைப்போம். பழங்குடி மாணவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். எங்கெல்லாம் மாணவர்கள் உள்ளார்களோ அங்கு எல்லாம் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கச் சொல்லி வருகிறோம்’’ என்றார்.
புதுச்சேரியில் மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது, நாம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ''முதலமைச்சர் இது குறித்து முடிவெடுப்பார். டிஇஓ பதவி உயர்வு ஏற்கனவே முறையாக நியமனம் நடைபெற்று வருகிறது. ஆனால், அவர்கள் நியமனத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க கேட்கின்றனர். அது குறித்து பேசப்படும்’’ எனக் கூறினார்.
இதற்கு முன்னதாக நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கான எண்ணிக்கையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வின் முடிவுகள் வெளியீடு: 193 கல்லூரியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்!