சென்னை: தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 501 முதல் 600 மதிப்பெண் வரை 23 மாணவர்களும், 401 முதல் 500 வரையில் 127 மாணவர்களும், 301 முதல் 400 மதிப்பெண்கள் வரையில் 437 மாணவர்களும், 201 முதல் 300 வரையில் 651 மாணவர்களும், 107 முதல் 200 மதிப்பெண்கள் வரையில் 2740 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் நடைபெற்ற 2023 நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 13ஆம் தேதி வெளியானது. 2022-2023ஆம் கல்வி ஆண்டில், நீட் தேர்வில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதிய நிலையில், 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 997 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 3,982 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அதாவது, மொத்தம் 31 சதவீத மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் சேருவதற்குத் தகுதி பெற்றுள்ளனர். 2021- 22ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவர்களில், 67 ஆயிரத்து 787 மாணவர்கள் தகுதி பெற்றனர். அதில் அரசுப் பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 979 மாணவர்களில், நீட் தேர்வில் 4,118 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் 461 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பிலும், 106 மாணவர்கள் பி.டி.எஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட சுமார் 500 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என தெரிகிறது. எனவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இந்த வாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவக் குழுமம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்ட பின்னர், அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து வழிகாட்டுதல் வந்தப் பின்னர் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் 60 வயதிலும் அசத்தும் பெண் புகைப்பட கலைஞர்!