சென்னை: தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி நவம்பர் 1ஆம் நாள் அன்று உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,“உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களைக் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தாலம், மேலும் அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்குக் கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சிகள் தினத்தினை கொண்டாடும் விதமாகச் சிறப்பாகச் செயலாற்றிய, பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்குச் சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சித் தலைவர்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பட்டறைகள் போன்றவற்றை நவம்பர் முதல் வாரத்தில் நடத்திடலாம்.
மேலும், இப்பணிகளைத் தொடர்புடைய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவனம் மண்டல பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்திட வேண்டும். நவம்பர் 1ஆம் நாள் "உள்ளாட்சிகள் தினம்" குறித்த நிகழ்வுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தீபாவளி: கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கியது