தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மதிய உணவு கிடைக்காத பட்சத்தில் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் முதலமைச்சர் உத்தரவிட்டால் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் தகுந்த இடைவெளியோடு சத்துணவு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்று சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மாற்றாக பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு அரசாங்கம் துரிதமாக செயல்பட்டது. இதனை தவிர்த்திடவும் சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 7ஆம் தேதி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 4 ஆயிரம் பேருக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய சத்துணவுத்துறை ஆணையர் ஆபிரகாம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த ஆணையை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநிலத் தலைவர் சுந்தராம்பாள், பொதுச்செயலர் நூர்ஜஹான் ஆகியோர் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகளின் நலனைக் காக்கும் வகையில் தகுந்த இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தினோம். சத்துணவுத் துறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலே சம்பளம் பிடித்தம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜனநாயக பூர்வமாக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்ட ஊழியர்கள் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர் என்பதை அறிந்தும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் என்பது ஊழியர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊதியப்பிடித்த ஆணையை ஆணையர் திரும்பப்பெற வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சத்துணவு முட்டை, இலவச நாப்கின் வழங்குவது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு