தமிழ்நாடு அரசு மருத்துவமனை பரிசோதனை மையத்தில் பணிபுரியும் லேப் டெக்னீசியன்கள் அரசு பரிசோதனை மையத்தை தனியார் மையம் ஆக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு செயலாளர் இரவீந்திரநாத் பேசுகையில், "தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீசியன்கள், படித்தவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டால் தமிழ்நாடு அரசு அனைத்து லேப் டெக்னீஷியன்களுக்கு வேலை வழங்க முடியும். அதற்கு மாறாக தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள பரிசோதனை மையத்தை தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு மூடி வருகின்றது.
அரசு பரிசோதனை மையங்களை தனியாருடன் இணைக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது. இதனால் வேலையின்மை உருவாகும். எனவே தமிழ்நாடு அரசு, அரசு பரிசோதனை மையத்தை தனியார் மையம் ஆக்கக் கூடாது, ஒப்பந்தம் அடிப்படையில் லேப் டெக்னீஷியன்களை பணி நியமனம் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்பாட்டம் செய்துவருகின்றோம்.
இதனை நிறைவேற்றவில்லை என்றால் அரசுக் கல்லூரியில் படித்த லேப் டெக்னீஷியன்களும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பும் இணைந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணிரத்தினம் உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: ஜவாஹிருல்லா கண்டனம்