காஞ்சிபுரம் மாவட்டம் ஐயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தன்னுடன் 11 பேரையும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 55 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், தங்களின் பணத்தை மீட்டுத் தந்து நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திகேயன், சென்னை அம்பத்தூர் ஓ.டி பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவர் மூலம் முத்துசாமி தங்களுக்கு அறிமுகமானதாகவும், வருவாய்த்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றுவதாகவும் முத்துசாமி, தனது பதவி பலத்தை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியதாக தெரிவித்தார்.
இதற்கு மூன்று தவணைகளில் ரூ. 55 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் கூறினார். பணம் பெறும்போது அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் சைரன் வைத்த காரில் வந்ததாகவும், அரசு முத்திரை பதித்த பணி நியமண ஆணையின் நகலை கொடுத்ததாகவும் தெரிவித்த கார்த்திகேயன், பல மாதங்களாகியும் பணி வழங்கப்படாததால், சந்தேகமடைந்து விசாரித்தபோது அவர் அளித்தது போலியான பணி நியமண ஆணை என்பது தெரிய வந்ததாகக் கூறினார்.
மேலும், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி தங்களது பணத்தையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்து வரும் முத்துசாமி என்பவர் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பதாக பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஏடிஎம் வங்கியில் கொள்ளை முயற்சி!