"சென்னையில் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்ட எனது உறவினர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும், அங்கு குறைவான படுக்கை வசதி இருந்தது. எனவே பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்" என்று கூறி முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் காணொலி ஒன்றை வெளியிட்டார். அந்தக் காணொலி சமூக வலைதளங்கள் வைரலாகப் பரவியது.
அது தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், "சென்னையில் உள்ள மருந்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதுமான அளவு உள்ளன. பொய்யான தகவலைப் பரப்பிய வரதராஜன் மீது பெருந்தொற்று நோய் குறித்து பொய்யான தகவல் பரப்பியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து மீண்டும் வரதராஜன், உறவினர் கரோனா சிகிச்சைப் பெற்று நலமாக இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருவதாகவும் கூறி மற்றொரு காணொலியைப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவை:
- பிரிவு 153- கலகத்தை விளைவிக்கும் உள்கருத்தோடு செயல்படுதல்,
- பிரிவு 505(1)(b)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புதல்,
- தொற்று நோய் தடுப்புச் சட்டம்,
- பேரிடர் மேலாண்மைத் தடுப்புச் சட்டம்,
- பிரிவு 188- அரசு ஊழியரால் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மதிக்காமலிருத்தல்.
இதையும் படிங்க: செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் விஜய பாஸ்கர்