Tamil Nadu government employees union: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு, பொதுச்செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்ற பேரியக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் சார்பாகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு, எங்களையும் எங்கள் இயக்கத்தையும் கௌரவப்படுத்தியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்பிக்கை விதை
அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிலுவை கோரிக்கைகளில் ஒன்றையேனும் அறிவித்து, அனைவரையும் மகிழ்விப்பார் என்ற ஆவலோடு காத்திருந்த லட்சக்கணக்கான ஊழியர்கள், வேகத்தோடு வந்து சோகத்தோடு திரும்பிப் போனாலும் அவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் புது நம்பிக்கை பிறந்திருக்கிறது.
உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன் என்ற புத்துணர்வு நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள் நீங்கள்.
அதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல இன்னும் கடமைப்பட்டிருக்கிறோம். மாநாட்டில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அரசு ஊழியரின் நெஞ்சிலும் எழுதப்பட்ட செப்பேடுகளாய் நிற்கின்றன. அரசு ஊழியர்கள் வரலாற்றில் பத்தாண்டு கால இருண்ட ஆட்சி மறைந்து ஆறு மாத காலமாக மக்களின் மனசாட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
பேச்சு யதார்த்தம்
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது ஒரு நெருக்கடி அரசாங்கத்திற்கு வந்துகொண்டிருந்ததாலும், நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாலும் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்ற தங்களின் வெளிப்படையான பேச்சு யதார்த்தமானது என்பதை அறிவோம்.
அதனால்தான் எங்கள் உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் பொறுமையுடன் காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளில் சிலவற்றை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாங்கள் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டுகிறோம்.
இதன்மூலம் அரசாங்கத்தின் சுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதோடு அரசு ஊழியர்கள் அரசுப் பணிகளிலும் மக்கள் திட்டப் பணிகளிலும் இன்னும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்படுவார்கள்.
அரசு ஊழியர்கள் உற்சாகம்
அரசாங்கம் முன்னேற்றப் பாதையில் முழு வீச்சில் பயணிக்க அரசு ஊழியர்கள் மேலும் உழைப்பார்கள். அரசுடன் துணை நிற்பார்கள் என்ற உறுதியையும் நாங்கள் தங்களுக்குத் தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு அதை ஒரு கையேடாக மாநாட்டு மேடையிலேயே வழங்கப்பட்டது.
அதை நீங்கள் பெற்றுக்கொண்டதோடு அவற்றைப் பரிசீலிப்பதாக மேடையிலேயே உறுதியளித்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அரசு ஊழியர்களை உற்சாகமூட்டியுள்ளது.
மேற்படி கோரிக்கைகளில் நிதிச்சுமை சாராத கோரிக்கைகளின் பேரில் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொள்வதில் அரசுக்கு எந்தவித இடர்ப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை. பிறக்கின்ற புத்தாண்டில் நல்லதொரு அறிவிப்புகள் வெளிவரும் என்று அனைத்துத் தரப்பு அரசு ஊழியர்களும் நம்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்