தமிழ்நாட்டில் கரோனாத் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவிவருகிறது. இதனைத் தடுப்பதற்காக தற்போழுது இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கரோனா தொற்றின் பரவும் வேகம் அதிகரித்தே வருகிறது.
தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தொட்டுவிட்டது. தமிழ்நாட்டில் 23க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு நாளை (மே 6) முதல் கொண்டுவருகிறது. ஆனாலும் தற்பொழுது பரவியுள்ள தொற்றின் பாதிப்பு குறையுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகரன் தமிழக முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினை நேற்று (மே 4) நேரில் சந்தித்து அரசு டாக்டர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் கரோனாவை கட்டுபடுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு அரசு டாக்டர்கள் உறுதுணையாக உறுதியாக பணியாற்றுவோம் எனவும் கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் கூறும்போது, "தற்பொழுது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாத் தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.
நோய் தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், படுக்கைகளின் பற்றாக்குறையும் அதிகரிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் ரெமிடெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் தொடர் சங்கிலியை நிறுத்துவதற்கு மாநிலம் தழுவிய பொது முடக்கத்தினை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் உடனடியாக இதனை செய்ய வேண்டும்.
பொது முடக்கத்தின்போது, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை பணிநியமனம் செய்ய வேண்டும். மேலும் ரெமிடெசிவர் மருந்தை அதிகளவில் இறக்குமதி செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது" என்று கூறினார்.