சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்தவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த பயணி உடலில் டேப் போட்டு ஒட்ட வைத்தபடி, 55 லட்சம் மதிப்புடைய 1.07 கிலோ தங்கப் பசையை கடத்தி வந்ததை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட 55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த விமானப் பயணியிடம், இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்றிரவு (மார்ச்.23) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலா விசாவில் துபாய்க்கு சென்று விட்டு, சில நாட்களுக்குப் பின்னர், இந்த விமானத்தில் இந்தியா திரும்பி இருப்பது தெரிய வந்தது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த இந்த பயணியின் மீது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவருடைய உடமைகளை சோதித்த போது, அதில் எதுவும் இல்லை.
இதையும் படிங்க: புளியங்குடி தெருவிற்கு “லெப்டினன்ட் பார்த்திபன் தெரு” எனப்பெயர் மாற்றம் - தமிழக அரசு
இருந்த போதிலும், அவர் மீது சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கலைந்து, முழுமையாக சோதித்த போது, அவருடைய உடலில் மூன்று சிறிய பார்சல்களை அயன் பட பாணியில் டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சிறிய பார்சல்களை எடுத்து பிரித்த போது, அதனுள் தங்கப் பசை இருந்தது.
மூன்று பார்சல்களிலும் ஒரு கிலோ 70 கிராம் தங்கப் பசை இருந்தது. அந்த கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.55 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சுங்க அதிகாரிகள் தங்கப் பசை பார்சல்களை பறிமுதல் செய்ததோடு, நூதனமான முறையில் தங்கப் பசையை பார்சல்களாக உடலில் டேப் போட்டு ஓட்ட வைத்து, மேலே ஆடைகளை அணிந்து கொண்டு வந்த பயணியயும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு இடங்களில் மோடி உருவபொம்மையினை எரித்து ஆர்ப்பாட்டம்!