சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பயணி, எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்று துபாயிலிருந்து வாங்கி வந்திருந்தார்.
அதனைப் பார்த்த அலுவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அந்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை திறந்துப் பார்த்தபோது, அதனுள் 300 கிராம் எடையுள்ள வட்டவடிவமான தங்கக் கட்டி மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 13 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து, தங்கத்தைப் பறிமுதல்செய்த அலுவலர்கள், அப்பயணியைக் கைதுசெய்தனர்.
இந்நிலையில் சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, உள்ளாடைக்குள் 13 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான 290 கிராம் தங்கப் பசையை மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், நேற்று (பிப்ரவரி 14) சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலகம் அருகே இருந்த இரண்டு குப்பைத் தொட்டிகளை, விமான நிலைய தூய்மைப் பணியாளர்கள், சுத்தப்படுத்தும்போது அதனுள் இருந்து சுமார் 42 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான 960 கிராம் தங்கப்பசை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குப்பைத் தொட்டி அருகேவுள்ள கண்காணிப்புக் கேமராக்களை அலுவலர்கள் சோதனை செய்து, குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து, தங்கம் கடத்தியவர்களைக் கைதுசெய்த அலுவலர்கள், தங்கத்தைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கம் - சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை