சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகள் இறங்கியதும் இளைஞர் ஒருவர் மட்டும் பதற்றத்துடன் வெளியேற முயன்றார். இதைக் கவனித்த சுங்கத் துறையினர் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். சுங்கத் துறையினரின் விசாரணையில் ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, விமானத்தின் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த ஒரு கோடியே 91 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 50 கிராம் எடை கொண்ட தங்கத்தை அலுவலர்கள் கைப்பற்றினர்.
மேலும், தங்கத்தை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த ஷேகுல் ஹபீஸ் (28) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடத்தல் தங்க நகை, ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்!